சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-18 07:15 GMT

மீனம்பாக்கம், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள கழிவறையில் துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது கழிவறையில் ஒரு மர்ம பார்சல் கேட்பாரற்று இருந்ததை கண்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள், அந்த பார்சலில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.

பின்னர் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் தங்க பசை இருந்ததை கண்டனர். அந்த தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் இருந்தது. வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமி, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கடுமையான சோதனை செய்வதை கண்டதும், அதனை கழிவறையில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.

அந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்? அதனை கழிவறையில் வீசியது யார்? இதற்கு விமான நிலைய ஊழியர் உடந்தையா? என்ற கோணத்தில் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்