மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் மோசடி
மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் மோசடி;
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் உள்ள மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் மோசடி செய்த பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
மகளிர் விடுதி
கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 5- க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் ஐ.டி.நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த கணபதி என்பவரது மகள் சுகிர்தா என்பவர் வேலை பார்த்து வந்தார். விடுதி உரிமையாளர் முழு பொறுப்பையும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சுகிர்தாவிடம் ஒப்படைத்து இருந்தார்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், விடுதியில் தங்கியிருந்த பெண்கள், தங்களது உடைமைகளை அறையிலேயே வைத்துவிட்டு, சாவிகளை விடுதி அலுவலக அறையில் வைத்துவிட்டு சென்றனர். சுகிர்தாவும் அலுவலக வரவு,செலவு கணக்குகளை ஒப்படைக்காமல் ஊருக்கு சென்று விட்டார்.
கொலை மிரட்டல்
இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பெண்கள் மீண்டும் விடுதிக்கு வந்தனர். அப்போது மீ்ண்டும் சுகிர்தா விடுதிக்கு வந்து பணியில் சேர்ந்துள்ளார். சில மாதங்கள் ஆன நிலையில் சுகிர்தா, தனது சித்தி இறந்து விட்டதாகவும், அதற்காக ஊருக்கு சென்று விட்டு பின்னர் வந்து, வரவு, செலவு கணக்குகளை ஒப்படைப்பதாக கூறி உள்ளார்.இந்த நிலையில் சுகிர்தாவை விடுதி உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தொடர்பை துண்டித்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் விடுதி உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு விடுதியின் வரவு,செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
ரூ.31 லட்சம் மோசடி
இதனால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்பபடிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருடப்பட்டு இருந்ததும், விடுதி உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து அதிக கட்டணம் பெற்றுள்ளதும், பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல், கட்டண ரசீது புத்தகங்களையும் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. மேலும் சுகிர்தாவின் கள்ளக்காதலர்கள் பிரபு மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் ஜிபே கணக்குகள் மூலம் ரூ.31 லட்சத்துக்கு மேல் விடுதி கட்டணத்தை கையாடல் செய்து மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதுகுறித்து விடுதி உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் பிரபு, ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று அவர்களை கைது செய்தனர்.