சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் தங்கம், செல்போன்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், மடிக்கணினி உள்ளிட்ட எலக்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-06-08 18:35 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர். அப்போது சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது காசிம் (வயது 35) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

தங்கம்-செல்போன்கள்

அதில் செல்போன்கள், விளையாட்டு சாதனங்கள், மடிக்கணினி ஆகியவை இருந்தன. சந்தேகத்தின்பேரில் செல்போன்களை பிரித்து பார்த்த போது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 517 கிராம் தங்கம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக முகமது காசிமை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்