ரூ.3 கோடி நகை-பணம் கொள்ளை; 3 பேர் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது வீட்டில் இருந்து ரூ.3 கோடி நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மகள் போல பழகி கைவரிசை காட்டிச்சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-03 19:45 GMT

கோவை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது வீட்டில் இருந்து ரூ.3 கோடி நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மகள் போல பழகி கைவரிசை காட்டிச்சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவையில் நடந்த பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ரியல் எஸ்டேட் பெண் அதிபர்

கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. அவர், தனது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் உள்ளார்.

வெங்கடேசன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே வீட்டில், ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் அறிமுகம்

ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த ராஜேஸ்வரிக்கு, சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த வர்ஷினி(26) என்ற இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமானார்.

தொழில் முறையில் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி, ராஜேஸ்வரியிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார், வர்ஷினி. மேலும் தன் மூலம் பலருக்கு நிலத்தை விற்பனை செய்து கொடுத்துள்ளார்.

இதற்காக அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று வந்த வர்ஷினி, அவருக்கு சாப்பிட ஏதாவது கொண்டு சென்று உள்ளார்.

மகள் போல பழகினார்

மேலும் அவரை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு சாப்பிட்டீர்களா, உடலை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டு வந்து உள்ளார். இதனால் ராஜேஸ்வரிக்கு வர்ஷினியை மிகவும் பிடித்து விட்டது. வர்ஷினியும் மகள் போல பழகி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி ராஜேஸ்வரி சென்னையில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்றார். பின்னர், விமானம் மூலம் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார்.

இட்லி-கோழிக்குழம்பு

அப்போது ராஜேஸ்வரியை தொடர்பு கொண்ட வர்ஷினி, சாப்பிட்டீர்களா என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் நான் இப்போதுதான் வீட்டுக்கு வந்து உள்ளேன் என்று கூறினார்.

உடனே அவர், நான் இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் வைத்துள்ளேன், கொண்டு வரட்டுமா என்று கேட்டு உள்ளார். உடனே அவரும் கொண்டு வா என்று கூறினார்.

சிறிது நேரத்தில் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு சென்ற வர்ஷினி, அவருக்கு இட்லியும், நாட்டுக்கோழி குழம்பும் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், தனக்கு தூக்கம் வருவதாக கூறிய ராஜேஸ்வரி, வீட்டின் பிரதான அறையில் இருந்த ஷோபாவிலேயே படுத்து தூங்கிவிட்டார்.

படுக்கை அறையில் இருந்து வந்தார்

நள்ளிரவு 12.30 மணிக்கு லேசாக தூக்கம் கலைந்து எழுந்தார், ராஜேஸ்வரி. அப்போது அவரது படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த வர்ஷினியை பார்த்து, எனது படுக்கை அறைக்கு ஏன் சென்றாய். உன்னை அங்கு செல்லக்கூடாது என்று கூறி உள்ளேன் அல்லவா என்று கேட்டார்.

அதற்கு வர்ஷினி, கழிவறை சென்றேன் என்று கூறினார். பின்னர் ராஜேஸ்வரி, தனது படுக்கை அறைக்கு சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இவர் யார்?, ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டதுடன், வர்ஷினியை பார்த்து இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு உள்ளார்.

மாயமான நகை-பணம்

இதனால் திடுக்கிட்ட வர்ஷினி, பதில் எதுவும் கூறாமல் அந்த நபருடன் வீட்டில் இருந்து வெளியேறி, காரில் ஏறி சென்றுவிட்டார்.

இதற்கிடையே இட்லியும், கறிக்குழம்பும் சாப்பிட்டதில் சோர்வாக இருந்த ராஜேஸ்வரி, மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.2½ கோடி ரொக்கப்பணம், 100 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஸ்வரி, வர்ஷினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அதன் பிறகே தனக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அவர் உணர்ந்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் நடந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதனிடையே கொள்ளையர்களை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சதீஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையில் உள்ள போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அத்துடன் ராஜேஸ்வரி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் வர்ஷினி, 4 பேருடன் சேர்ந்து ராஜேஸ்வரி வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.

ரகசிய தகவல்

தொடர்ந்து நடத்திய விசாரணையில் வர்ஷினி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் அருண்குமார் (37) என்பவர் உள்பட 4 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. எனவே தலைமறைவான அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய அருண்குமார், பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரவீன் (32), சுரேந்தர் (25) ஆகியோர் பொன்னரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

3 பேர் கைது

இதையடுத்து பொன்னேரி விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த அருண்குமார், பிரவீன், சுரேந்தர் ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம், 31 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளம்பெண்ணுக்கு வலைவீச்சு

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வர்ஷினி, அவருடைய கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மகள் போல பழகி, அவருக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்துகொடுத்து ரூ.3 கோடி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பெண் வர்ஷினி மீது பல்வேறு மோசடி வழக்குகள்

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.3 கோடி பணம்-நகையை கொள்ளையடித்த இளம்பெண் வர்ஷினி, திருமணமானவர். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தனது பணத்தேவைக்கு, வீட்டில் தனியாக இருக்கும் வசதிபடைத்தவர்களை நோட்டம் விட்டு அவர்களிடம் நன்றாக பழகி, அவர்கள் அசந்த சமயத்தில் அவர்களிடம் இருக்கும் பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

வர்ஷினி மீது ஏராளமான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. வேலை வாங்கித்தருவதாகவும், நிலத்தை விற்பனை செய்து தருவதாகவும் கூறி பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வர்ஷினி தான் முதலில் ஒருவரிடம் அறிமுகம் ஆகும்போது, அவர்களின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தனது புகைப்படம் ஒன்றை அனுப்பி வைப்பார். அதில் அவர் மேக்கப் போட்டு நடிகை போன்று அழகாக இருப்பார்.

இதைப்பார்த்து மயங்குபவர்களை குறிவைத்து, தனது திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் வர்ஷினி என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே அவரை கைது செய்த பின்னர்தான், எத்தனை பேரை அவர் இதுபோன்று ஏமாற்றினார் என்பது குறித்து முழு தகவல் வெளியாகும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமானவரித்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்

ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பணம்-நகையை கொள்ளையடித்த வர்ஷினி, அதில் ரூ.35 லட்சத்தை அருண்குமாரிடம் கொடுத்து உள்ளார். அதில் ரூ.31 லட்சத்தை அருண்குமார், தனது நண்பர்கள் சுரேந்திரன், பிரவீன் ஆகியோரிடம் கொடுத்து திருவள்ளூருக்கு கொண்டு செல்லும்படி கூறி உள்ளார். அதன்படி அவர்கள் காரில் கொண்டு சென்று உள்ளனர். சேலம் அருகே சென்றபோது, திடீரென்று அவர்களின் காரை வருமானவரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்து உள்ளனர்.

அப்போது அவர்களிடம் ரூ.31 லட்சம் இருந்ததால், அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் ஆவணம் இல்லை என்பதால் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். அந்த பணத்தை வருமானவரித்துறையிடம் இருந்து மீட்டு ராஜேஸ்வரியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்