கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக ரூ.26 லட்சம் மோசடி - வியாபாரி கைது

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-26 06:28 GMT

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் நாசர் (வயது 47). இவர், தினமும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆப்பிள் பழங்களை பெட்டிகளில் இறக்குமதி செய்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார்.

பெங்களூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (43) என்பவர் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஆப்பிளை வாங்கி, நாசரிடம் கொடுத்து அதனை விற்று தரும்படி கொடுத்தார். அவரிடம் இருந்து ஆப்பிளை வாங்கி விற்பனை செய்த நாசர், ரூ.6 லட்சத்தை மட்டும் ராஜேஷ்குமாரிடம் கொடுத்து விட்டு மீதி ரூ.26 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார்.

ராஜேஷ்குமார் தனக்கு தரவேண்டிய ரூ.26 லட்சத்தை தருமாறு நாசரிடம் பலமுறை கேட்டு வந்தார். அதற்கு அவர், பணத்தை தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் திடீரென நாசர் தலைமறைவானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார், இந்த மோசடி தொடர்பாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாசரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு நாசர் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் மாறுவேடத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நாசரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்