கல்லூரி மாணவிகளிடம் நூதன முறையில் ஆன்லைனில் ரூ.22 லட்சம் மோசடி
கல்லூரி மாணவிகளிடம் நூதன முறையில் ஆன்லைன் மூலம் ரூ.22 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, தனது செல்போனில் இணையதளத்தை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆன்லைனில் தவணை முறையில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வந்தது. அதோடு ஒரு இணையதள இணைப்பும் (லிங்க்) வந்தது. உடனே மாணவி, அந்த இணையதள இணைப்புக்குள் சென்று பார்த்தார்.
அப்போது அந்த இணையதளத்தில் பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யும்படி அறிவிப்பு வந்தது. அதன்படி மாணவி ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து விட்டு லைக், ஷேர் செய்தார். அதற்கு ஒவ்வொரு முறையும் அவருடைய வங்கி கணக்குக்கு பணம் வந்தது. அந்த வகையில் மொத்தம் ரூ.40 ஆயிரம் அவருடைய வங்கி கணக்குக்கு வந்தது. அதையடுத்து மாணவி இணையதளத்தில் தொடர்ந்து வீடியோக்களை பார்த்தார்.
ரூ.18 லட்சம் மோசடி
ஆனால் புதிய இலக்கில் வெற்றிபெற முன்பணம் செலுத்தும்படி வந்தது. அதன்படி மாணவி தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை செலுத்தினார். எனினும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அதிக பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆவலில் இருந்த அவர், வீட்டில் இருந்த நகைகளை பெற்றோருக்கு தெரியாமல் வங்கியில் அடகு வைத்து பணம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் மொத்தம் ரூ.18 லட்சம் வரை செலுத்தி இருக்கிறார்.
ஆனால் பணம் செலுத்தி வீடியோ பார்த்து, லைக் மற்றும் ஷேர் செய்தும் ஒருமுறை கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. அதோடு மேலும் பணம் செலுத்தும்படி அவருக்கு தகவல் வந்தது. அதன்பின்னரே ஆசை காட்டி மோசம் செய்த உண்மை அவருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருக்கிறார். இறுதியில் பணம் கிடைக்காத ஏமாற்றத்தில் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். இந்த 2 பேரின் புகார்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பீகார், மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர்கள் நூதன முறையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.