தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணம் திருட்டு

செய்யாறில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகளை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.

Update: 2023-07-18 18:45 GMT

செய்யாறு

செய்யாறில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகளை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.

தனியார் நிறுவன ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலைவாணி, சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இரவில் இவர்கள் வீட்டின்கீழ் பகுதியை பூட்டிவிட்டு மாடிக்கு சென்று தூங்குவது வழக்கம். அதன்படி இரவு வழக்கம்போல் வீட்டின் மாடிக்கு சென்று தூங்கினர்.

திருட்டு

நேற்று காலை எழுந்ததும் வீட்டின் முன் தண்ணீர் தெளித்து கோலமிடுவதற்காக கலைவாணி கீழே வந்தார். அப்போது கீழ் தளத்தில் உள்ள வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த கலைவாணி கணவர் கணேஷிடம் தெரிவித்தார்.

வீட்டினுள் சென்று அவர்கள் பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த சுமார் 55 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.1.50 லட்ச ரொக்கம் திருடு போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து கணேஷ் செய்யாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். உடனடியாக செய்யாறு போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைபற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

கைரேகை பதிவுகள் சேகரிப்பு

தடயவியல் நிபுணர்கள் மர்மநபர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் எ தெரிகிறது.

இது குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்