பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.20 கோடி மோசடி

பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.20 கோடிக்கும் மேல் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-26 23:17 GMT

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன் (வயது 25). பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார். இவரிடம் வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி (24) என்பவர், கடந்தாண்டு அறிமுகமானார். அப்போது அவர், தான் பட்டய கணக்காளர் படிப்பு முடித்துவிட்டு பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்து வருவதாக கூறினார்.

மேலும் சர்வபொம்மனிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பிய சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இது குறித்து சர்வபொம்மன் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

என்ஜினீயர் கைது

அதில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று விசாரித்ததில் அங்குள்ள நிறுவனத்தில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும், நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருப்பதும் தெரிந்தது.

கேரளா சென்றிருந்த அவர் பெங்களூரு திரும்பும் வழியில் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு வைத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் 3 பேரையும் சேலையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி இதுபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சர்வபொம்மன் உள்பட பலரிடம் ரூ.15 முதல் ரூ.20 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜியை நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்