ரூ.20 கோடியில் மருந்து பரிசோதனை ஆய்வகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
ரூ.20 கோடியில் மருந்து பரிசோதனை ஆய்வகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்;
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள மருந்து பரிசோதனை ஆய்வகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மருந்துகள் பரிசோதனை ஆய்வகம்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலக்குயில்குடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் கீழ் ரூ.20 கோடியில் மருந்துகள் பரிசோதனை ஆய்வகம், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகங்கள், மதுரை வடக்கு மண்டலம், மதுரை தெற்கு மண்டலம் மற்றும் நடமாடும் குழு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில ்5 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யக்கூடிய உலக தரவசதிகள் உள்ளன.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, கரூர் போன்ற 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட தென் மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகள் பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வகமாக அமைந்து உள்ளது. இந்த மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
அமைச்சர்-கலெக்டர் பங்கேற்பு
இந்த நிலையில் மேலக்குயில்குடியில் மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மருந்துகள் பரிசோதனை ஆய்வக உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், மருந்து பகுப்பாய் ஆய்வாளர்கள் சிவா, நித்யா கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர். நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் வேட்டையன், மாநகராட்சி கவுன்சிலர் உசிலை சிவா, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மேலக்குயில்குடி ஊராட்சி தலைவர் ஜெயபிரபு, கவுன்சிலர் மாயாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அறிவழகன், வைரமணி, நேதாஜி நகர் பால்பாண்டி, மாவட்ட பிரதிநிதி டேவிட் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.