100 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியரிடம் ரூ.2 லட்சம் நூதன திருட்டு
100 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி கவனத்தை திருப்பி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த ஊழியரிடம் ரூ.2 லட்சத்தை நூதன முறையில் திருடிச்சென்றனர்.;
திருவள்ளூர் அடுத்த திருவலாங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 58). இவர் திருவாலங்காடு தேரடியில் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபி திருவாலங்காடு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தார். அந்த பணத்தில் தேரடி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.80 ஆயிரத்தை வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, அவர் தன் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நின்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 2 மர்ம நபர்கள் சாலையில் 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டு உங்களது பணம் சாலையில் சிதறி கிடப்பதாக தெரிவித்தனர். இதை உண்மை என்று நம்பிய அவர் அந்த ரூபாய் நோட்டுக்களை எடுக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் கோபியின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் நிரப்பும் ஏஜென்டிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்து சென்ற மர்ம நபர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள்.