ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் ரூ. 13 லட்சம் கொள்ளை

இந்த கொள்ளை தொடர்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-04-11 16:15 IST

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை, பிரதான சாலையில் சவுத் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த 6-ந் தேதி மாலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை ஊழியர்கள் நிரப்பி சென்றனர். வழக்கமாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் எந்திரத்தில் பணம் வைப்பது வழக்கம். ஆனால் புதிதாக பணம் நிரப்பப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களிலேயே வாடிக்கையார்களால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்ற தகவலே காண்பித்தது.

இதுபற்றி வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாதபடி நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுபற்றி வங்கி உயர் அதிகாரிகள் ஏ.டி.எம். நிபுணர்களை வரவழைத்து ஏடிஎம்மில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பப்பட்ட 2 நாட்களுக்கு பிறது நம்பர் பிளேட் இல்லாத காரில் 4 மர்ம நபர்கள் வருவதும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தும் நம்பர் லாக் மூலம் அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தம் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 200 கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரிந்தது.

முதல் நாளில் ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 200 மற்றும் மறுநாள் காலை 9:40 மணிக்கு வந்து ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்தை எந்தவித பதட்டமும் இன்றி பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் இருந்ததால் அதில் கொள்ளை நடந்தது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வங்கியின் மேலாளர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை கும்பல் ஏ.டி.எம்.மின் ரகசிய எண்களை தெரிந்து கைவரிசை காட்டி உள்ளதால் வங்கியோடு தொடர்புடைய நபர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்