அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.12½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: அதிகாரி-டாக்டர்களுக்கு கோர்ட்டு உத்தரவு

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.12½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிகாரி-டாக்டர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-28 19:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவரது மனைவி தவுலத் பர்வீன். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ராஜாமுகமது தவுலத்பர்வீனை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் தவுலத் பர்வீன் தனது தாய் மும்தாஜ் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் தவுலத் பர்வீன் கடந்த 4.2.2013 அன்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அரசு உதவி டாக்டர்களாக பணிபுரிந்த சூரியா, பிரியா ஆகியோர் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது தவறுதாக சிறிதளவு பஞ்சுப்பொதியை தவுலத் பர்வீனின் உடலுக்குள் டாக்டர்கள் தவறுதலாக வைத்து சிகிச்சையை முடித்துவிட்டனர்.

தவுலத்பர்வீனுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது உடலில் பஞ்சு கட்டியாக இருந்ததும், அழுகி இருந்ததும் கண்டறியப்பட்டு, அதனை டாக்டர்கள் அறுவை சிசிச்சை செய்து அகற்றினர். ஆனால் 25.8.2013 அன்று தவுலத் பர்வீன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து 4 குழந்தைகளை மனுதாரர்களாக கொண்டு காப்பாளர் என்ற வகையில் மும்தாஜ் தங்களது வக்கீல்கள் வள்ளுவன்நம்பி, பெரியசாமி ஆகியோர் மூலம், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவைகுறைபாடு காரணமாகவும், பெரம்பலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர், அரசு உதவி மருத்துவர் டாக்டர் சூரியா, பெரம்பலூர் அரசுமருத்துவமனையில் இருந்து பணிமாற்றலாகி தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியுரியும் டாக்டர் பிரியா ஆகிய 3 பேரும் சேர்ந்து 4 மனுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்தை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்