ரவுடியின் தம்பி சரமாரி வெட்டிக்கொலை

கோட்டக்குப்பம் அருகே ரவுடியின் தம்பி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;

Update: 2023-05-30 18:45 GMT

வானூர்

ஓட்டல் மேலாளர்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனிச்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விமல் (வயது 35). இவர் ஆரோவில் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று காலை ஓட்டலுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து ஆரோவில்லுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சுற்றிவளைத்து வெட்டு

கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விமலை, 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து சென்றது. ஆரோவில் பொம்மையார்பாளையம் சாலை அருகே வந்தபோது, திடீரென்று அந்த கும்பல் விமலின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, மார்பு பகுதியில் வெட்டுக்காயம் விழுந்து, ரத்த வெள்ளத்தில் அங்கேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்த அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடய அறிவியல் நிபுணர் ராஜு தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, தடயங்களை சேகரித்தனர். இந்த படுகொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலையான விமலின் அண்ணன் வினோத் பிரபல ரவுடியான சோழனின் கூட்டாளி என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு புதுவை நகர பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் கழுவா செந்தில், பிளாக் பாலாஜி கொலை வழக்கில் வினோத் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார்.

தொடரும் பழிக்குப்பழி

பிரபல ரவுடி அன்புரஜினியின் உறவினர் ரவுடி ஜனாவின் கூட்டாளிகளுடன் வினோத்துக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது ஜனாவின் கூட்டாளிகளை வினோத் தாக்கியுள்ளார். எனவே வினோத்தை கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடி அருகே கடந்த 2019-ம் ஆண்டு அன்பு ரஜினி தரப்பினர் கொலை செய்தனர். வினோத்தின் கொலைக்கு பழிக்குப் பழியாக சோழன் தரப்பினர் கடந்த 2020-ம் ஆண்டு ரவுடி அன்பு ரஜினியை கொலை செய்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய ஜெரோம் என்கிற ரவுடியை பழிக்குப்பழியாக 2021-ம் ஆண்டு சென்னை நீலாங்கரையில் வைத்து கொலை செய்தனர். இப்படி பழிக்குப்பழி தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வினோத்தின் தம்பி விமல், ரவுடி ஜனா கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. விமல் கொலை தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் சந்தேகத்தின்பேரில் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்