நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 268 நாட்கள் சிறை;பத்மநாபபுரம் சப்-கலெக்டர் உத்தரவு
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 268 நாட்கள் சிறையில் அடைக்க பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டுள்ளார்;
தக்கலை,
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 268 நாட்கள் சிறையில் அடைக்க பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டுள்ளார்.
நன்னடத்தை விதி மீறல்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை கவியலூரை சேர்ந்த தேவதாஸ் மகன் வர்கீஸ் என்ற வெடிகுண்டு ஆல்பர்ட் (வயது 49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் மீது தக்கலை போலீஸ் நிலையத்தில் 5 குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் ரவுடி பட்டியலில் உள்ளார். எனினும் இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அடுத்த கட்டமாக குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர் நன்னடத்தை உறுதி சான்று பெறுவதற்கு தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் கல்குளம் தாசில்தார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஒரு வருடம் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாமல் நன்னடத்தையுடன் இருப்பேன் என சட்டப்படி உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இந்த விதியை மீறும் வகையில் அடுத்த மாதமே 425 போலி மதுபாட்டில்களை ஒரு வாகனத்தில் கடத்த முயன்றதாக தக்கலை மதுவிலக்கு போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
268 நாட்கள் சிறை
இந்தநிலையில் நன்னடத்தை விதியை மீறி மீண்டும், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆல்பர்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவரிடம் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்பாக இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது.
விசாரணை முடிவில் நன்னடத்தை விதியை மீறிய ஆல்பர்ட்டை 268 நாட்கள் சிறையில் அடைக்க சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.