ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவம்: நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் - தாய் தரப்பில் மனு

ரவுடி துரை என்கவுண்ட்டர் சம்பவத்தில் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது தாய் தரப்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-07-17 18:24 GMT

புதுக்கோட்டை,

திருச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி (வயது 40). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தைலமரக்காட்டு பகுதியில் ரவுடி துரை ஆலங்குடி போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த அவர் போலீசாரை கண்டதும் சுட்டதாலும், சப்-இன்ஸ்பெக்டரை பட்டா கத்தியால் வெட்டியதாலும் தற்காப்பிற்காக போலீசார் என்கவுண்ட்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. ஐஸ்வர்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை போலீஸ் சூப்பிரண்டு புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரவுடி துரையை போலி என்கவுண்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், ஆலங்குடி நீதிபதி நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது தாய் மல்லிகா தரப்பில் வக்கீல் பிரபாகரன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. உதவியாளாிடம் மனு அளித்தார்.

மேலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் வக்கீல் தெரிவித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதற்கிடையில் ரவுடி என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக வருகிற 19-ந் தேதி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இதில் இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிந்தால் உரிய சாட்சியங்களுடன் ஆஜராகலாம் என ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்