பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று தொடக்கம்
பழனி முருகன் கோவில் ரோப்காரில் 50 நாட்களாக நடந்த வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்க உள்ளது. பழனி முருகன் கோவில் ரோப்காரில் 50 நாட்களாக நடந்த வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
வருடாந்திர பராமரிப்பு
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மேலும் பக்தர்கள் எளிதில் சென்றுவரவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் செல்லவும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடிவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர்.
இந்த ரோப்காரில் பக்தர்களின் நலன் கருதி மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடக்கும்போது அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி, பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி தொடங்கியது. அதையடுத்து ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், 'சாப்ட்டு' எந்திரம் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று முதல் சேவை
இதற்கிடையே பராமரிப்பு பணிகள் ஏறக்குறைய முடிவடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் ரோப்காரில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ரோப்கார் பெட்டிகளில் 300 கிலோ அளவில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து இயக்கி சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ரோப் கார் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்பிறகு சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழுவினர் வந்து ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், "பழனி முருகன் கோவில் ரோப்காரில் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி தொடங்கிய வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்தது. தொடர்ந்து சோதனை ஓட்டம், வல்லுனர் குழு ஆய்வு நடைபெற்றது. அது வெற்றிகரமாக நிறைவு பெற்றதால் 50 நாட்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.