அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-04-05 18:45 GMT

விழுப்புரம் ஹைவேஸ் நகர் பெண்ணை வீதி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1-ந் தேதியன்று தன்னுடைய மாமியாரின் கரும காரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் திரும்பினார்.

நகை- பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு திருநாவுக்கரசு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்