விற்பனையாளர்களை கத்தியை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் கொள்ளை
விற்பனையாளர்களை கத்தியை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.;
ஸ்ரீரங்கம்:
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவல் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 19-ந்தேதி இரவு வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 2 விற்பனையாளர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்க, மதுபிரியர்கள் பணத்தை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்கு வெளியே, வெள்ளை டி-சர்ட், பேன்ட் மற்றும் மாஸ்க் அணிந்த ஒரு வாலிபர் நண்பருடன் வந்து சில மதுவகைகளை கூறி, அதை தருமாறு பணம் கொடுக்காமல் கேட்கிறார். அதற்கு ஒரு விற்பனையாளர் காசு கொடு என்றார். உடனே ஆத்திரமடைந்த அந்த வாலிபர், இடுப்பில் மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியை எடுத்து, கடையின் முன்பக்கம் போடப்பட்டு இருந்த கம்பி வலையில் ஓங்கி வெட்டினார்.
பின்னர், பாதுகாப்பு கதவை திறந்து கொண்டு கடைக்கு உள்ளே புகுந்த அவர், கையில் இருந்த கத்தியால் அங்கிருந்த மேஜை, மதுபாட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றின் மீது ஓங்கி வெட்டினார். அத்துடன், காசு காசுன்னு கேட்குறீங்க…. காசு தரமாட்டோமோ... என்றனர். உடனே விற்பனையாளர்கள் வாங்கிக்கலாம் அண்ணா என்று கூறவே... அந்த வாலிபர் ஆத்திரம் தணியாமல், ஒவ்வொரு மதுவகைகளாக கூற, அந்த மதுபாட்டில்களை விற்பனையாளர் எடுத்து கொடுத்தார்.
அவற்றை வெளியில் இருந்த அந்த வாலிபரின் நண்பர் எடுத்து தான் கொண்டுவந்த பையில் வைத்துக்கொண்டார். மேலும், அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு பாட்டிலையும் அந்த வாலிபர் எடுத்துக்கொண்டார். பின்னர், மொத்தம் எவ்வளவு ஆச்சு என்று வெளியில் நின்றவர் கேட்க, ரூ.1,120 என்று விற்பனையாளர் கூறினார். உடனே, கத்தியுடன் வந்த வாலிபர், நாளைக்கு தருகிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். டாஸ்மாக் கடையில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், தொடர்ந்து பாதுகாப்பு கதவை பூட்டிக்கொண்டு விற்பனையை தொடர்ந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் அதேகடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆடியோவுடன் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.