சிறை கன்னிமார் கோவிலில் கொள்ளை முயற்சி
சிறை கன்னிமார் கோவிலில் கொள்ளை முயற்சி;
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே சிறை கன்னிமார் கோவில் பூட்டு மற்றும் 10 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறை கன்னிமார் கோவில்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முத்தம்பாளையம் ஊராட்சி காட்டுப்பகுதியில் பிரசித்தி பெற்ற சிறை கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. இ்ந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 3 நாட்கள் திருவிழா நடைபெறும். கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவிலில் இரவு காவலாளி நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று அதிகாலை காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு பூசாரி வந்தார். அப்போது கோவிலின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு
இதனால் பதற்றத்துடன் கோவில் வளாகத்திற்கு சென்று பார்த்த போது கோவிலைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்படவில்லை. அவை பத்திரமாக அப்படியே இருந்தன. கோவில் உண்டியல் உடைக்கப்படவில்லை. இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவில் பூசாரி அளித்த தகவலின் அடிப்படையிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன்தினம் மதியம் சந்தேகப்படும்படியான 5 வாலிபர்கள் கோவிலை சுற்றி வருவதும் கோவில் உண்டியலை குறிவைத்து பேசிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. பகல் நேரத்தில் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவில் கொள்ளை முயற்சியில் இறங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் சிறை கன்னிமார் கோவில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பலர் கோவிலில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.