வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; முதியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளைபடித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-13 19:30 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியில் வசிப்பவர் பிரகாஷ் (வயது37). இவர் 108 ஆம்புலன்சில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தம்பி பிரபாகரன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் திருமணத்துக்கு உறவினர்களை அழைத்து பத்திரிகை வைப்பதற்காக வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 6 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரகாஷ் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடியை சேர்ந்த தங்கமுத்து (வயது77) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். திருட்டு நடந்த ஒரு வாரத்துக்குள் கொள்ளையில் தொடர்புடையவரை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்