அம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராசிபுரம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2022-11-12 18:45 GMT

ராசிபுரம்

நகை, பணம் கொள்ளை

ராசிபுரம் அருகே உள்ள கார்கூடல்பட்டி ஊராட்சியை சேர்ந்தது நாரைக்கிணறு பிரிவு ரோடு. இங்குள்ள அம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ரூ.2 லட்சம்

இந்த குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே இக்கோவிலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யாராவது இதில் ஈடுபட்டு உள்ளார்களா? இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே கோவிலில் ஏற்கனவே 2 முறை இதுபோன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம், நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

ராசிபுரம் அருகே கோவில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் கோவில் உண்டியல் உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்