இரு மனைவிகளுடன் சேர்ந்து நகைகள் திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையன் கைது...!

இரு மனைவிகளுடன் சேர்ந்து நகைகள் திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-02 04:26 GMT

கோவை,

கோவை-உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் மதுரையை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதி (வயது 67), பார்வதியின் மகன்கள் கண்ணையா (30), திவாகர் (26) மற்றும் திவாகரின் 2 மனைவிகள் கீதா (24), முத்தம்மா (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சேர்ந்து திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுவது தெரியவந்தது. குறிப்பாக ஓடும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகையை திருடியது அம்பலமானது.

இதையடுத்து போலீசார், குடும்பத்துடன் கொள்ளை கும்பலாக வலம் வந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது கொள்ளையன் திவாகர் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.

அந்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் மதுரை. நாங்கள் எங்கு சென்றாலும் குடும்பத்துடன் சென்று தான் திருட்டில் ஈடுபடுவோம். முதலில் நானும், எனது தாயார் பார்வதி மற்றும் தம்பி கண்ணையா ஆகியோரும் சேர்ந்து திருட்டு தொழில் செய்து வந்தோம். அந்த சமயத்தில் எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்த முத்தம்மாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவரும் தனது அக்காவுடன் சேர்ந்து திருட்டு தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

ஆரம்பத்தில் முத்தம்மாவும் நானும் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் எனக்கும் முத்தம்மாவிற்கும் அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். இதனால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வருவேன். அப்போது முத்தம்மாவின் அக்காள் கீதாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடமும் எனது காதலை தெரிவித்தேன். அவரும் எனது காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இது முத்தம்மாவிற்கு தெரியவந்தது. இதனால் அவருக்கு என்னை விட்டுக்கொடுக்க முடியவில்லை. கீதாவுக்கும் என்னை விட மனதில்லை.

இந்த நிலையில் நான், இரண்டு பேரையும் சமாதானம் செய்தேன். இருவரையும் திருமணம் செய்து கொள்கிறேன். இருவரும் என்னிடம் சந்தோஷமாக வாழலாம். அக்காள், தங்கை உறவும் விட்டு செல்லாமல் இருக்கும். நமது திருட்டு தொழிலை மேலும் சிறப்பாக செய்து ஜாலியாக உல்லாசமாக வாழ்க்கையை வாழலாம் என்றேன். அதற்கு 2 பேரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் திருமணம் செய்தேன்.

அவர்களுடன் வாழ்வதற்கு மதுரையில் 2 அறை உள்ள ஒரு வீட்டை வாங்கினேன். அதன்பின்னர் குடும்பம் நடத்த தொடங்கினேன். சில நாட்கள் கழித்து 2 மனைவிகளையும் மற்றும் எனது தாயார், தம்பியை அழைத்து கொண்டு கலந்து பேசி, திருட்டு தொழிலை தொடங்கினோம்.

தமிழ்நாடு முழுவதும் சென்று திருட்டில் ஈடுப்படுவோம். கூட்டம் அதிகம் உள்ள பஸ்களை குறி வைத்து குடும்பத்துடன் ஏறுவோம். மகளிர் இலவச பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். எனது 2 மனைவிகளும், தாயாரும் சேர்ந்து அந்த பஸ்களில் ஏறி பெண்களின் நகைகளை நைசாக அறுத்து எடுத்துவிடுவார்கள். ஒரு மாதம் ஒரு ஊரில் இருந்து நகைகளை திருடி, அதனை விற்கும் பணத்தில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்தும் தங்குவோம்.

அங்கு நான்றாக சாப்பிட்டு, ஜாலியாக ஊரை சுற்றிபார்த்து மதுரை திரும்வோம். அங்கு சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்ததாக ஒரு ஊரை தேர்வு செய்து குடும்பத்துடன் கிளம்புவோம். இவ்வாறு ஒவ்வொரு ஊராக சென்று நகைகளை திருடி உல்லாசமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்.

இந்த நிலையில் கோவையில் தொடர்ந்து நகைகளை திருடி ஜாலியாக இருந்து வந்தோம். அப்போது போலீசார் எங்களை குடும்பத்துடன் மடக்கி பிடித்து விட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்