ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் திருடிய கொள்ளையன் கைது - கண்காணிப்பு கேமரா காட்சியால் சிக்கினான்

ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-04-25 09:36 IST

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சிவகாம சுந்தரி (வயது 81). தன்னுடைய மகன் ஸ்ரீராம், மருமகள் பானு ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 21-ந் தேதி ஸ்ரீராமும், பானுவும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சிவகாம சுந்தரியை மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்தது மற்றும் வீட்டின் பீரோவில் இருந்தது என 45 பவுன் நகை, ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த குடியிருப்பு பகுதிக்கு சந்தேகப்படும்படியாக குடையுடன் வந்து சென்ற மர்மஆசாமி குறித்து விசாரித்தனர். மேலும் பழவந்தாங்கல், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது குடியிருப்பு பகுதியில் குடையுடன் சந்தேகப்படும்படியாக சென்ற ஆசாமி பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கி மூதாட்டி வீடு அமைந்துள்ள பகுதிக்கு ஆட்டோவில் வந்து சென்றதும், மீண்டும் அவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறிச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் அவர், ரெயிலில் இருந்து இறங்கி ஆட்டோவில் எங்கு சென்றார்? என அவர் செல்லும் இடங்களில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது கே.கே. நகர் நோக்கி சென்றதை கண்டுபிடித்தனர். அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சென்னை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், மூதாட்டி சிவகாம சுந்தரியை கொன்று நகை, பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் 2021-ம் ஆண்டு கே.கே. நகரில் வீட்டில் தனியாக இருந்த சீதாலட்சுமி உள்பட 2 மூதாட்டிகளையும் இதேபோல் கொன்று, நகை கொள்ளையடித்ததாகவும் கூறினார். வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை மட்டும் குறி வைத்து கொன்று, கொள்ளையடித்து வந்துள்ளார்.

கட்டிட உள்கட்டமைப்பு பணி செய்து வரும் சக்திவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக உரிய வேலை இல்லாததால் போதிய வருவாய் இன்றி, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் பரிதவித்தார். பணத்துக்கு என்ன செய்யலாம்? என ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர் பகுதியில் கண்காணித்து உள்ளார்.

அப்போது ஒதுக்குப்புறமாக உள்ள குடியிருப்பில் மூதாட்டி சிவகாம சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை கண்ட சக்திவேல், மூதாட்டியிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்தார். பின்னர் தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்ற மூதாட்டியை பின்ெதாடர்ந்து வீட்டுக்குள் சென்று அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்து, மூச்சை நிறுத்தி கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

கொள்ளையடித்த நகைகளை தியாகராயநகரில் உள்ள கடைகளில் அடகு வைத்து இருந்தார். அந்த கடைகளில் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. வேறு எங்காவது இதுபோல் நகைகளை கொள்ளையடித்து உள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்