ஆழியாறில் தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்- வனத்துறை அதிகாரிகள் தகவல்
ஆழியாறில் தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாறில் தோட்டங்களில் சுற்றித்திரியும் சிறுத்தை கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம்
பொள்ளாச்சி அருகே ஆழியாறு புளியங்கண்டியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கடந்த 2 நாட்களுக்கு முன் மர்ம விலங்கு கடித்து கொன்றதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது தோட்டத்தில் பதிந்து இருந்த விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்ததில், சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உடனடியாக தோட்டத்தை சுற்றி தென்னை மரங்களில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
ஆழியாறு புளியங்கண்டியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கடித்து கொன்றது சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கேமராக்கள் பொருத்தி நேற்று (நேற்று முன்தினம்) இரவு கண்காணிக்கப்பட்டது. அப்போது சிறுத்தை தோட்டம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து செல்வது தெரியவந்தது.
இரை தேடி சிறுத்தை தோட்டங்களுக்குள் புகுந்து இருக்கலாம். எனவே இரவு நேரங்களில் தோட்டத்து சாலையில் வசிப்பவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கப்படும். அதன்பிறகு கூண்டு வைத்து பிடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.