புழுதி மண்டலமாக காட்சி அளிக்கும் சாலைகள்

புழுதி மண்டலமாக சாலைகள் காட்சி அளிக்கின்றன.

Update: 2022-09-25 22:40 GMT

புழுதி பறக்கும் சாலை

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மெக்டொனால்ஸ் சாலையில் பாதாள சாக்கடை பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்த நிலையில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் சாலையில் மணல் திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுகிறது.

இதனால் அந்த சாலையில் புழுதி பறக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் ஏற்படும் நிலையில் கிளம்பும் புழுதி மண்டலத்தால், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் சுவாசிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

விபத்து ஏற்படும் அபாயம்

இதேபோல் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அங்கும் சாலை புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் டவுண் பஸ்கள், புறநகர் செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. புழுதி கிளம்புவதால் பஸ் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

புழுதி மண்டலத்தின் காரணமாக விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதியில் பல டீ கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளன. அங்கு வாடிக்கையாளர்கள் உண்ணும் உணவில் புழுதி, தூசுகள் விழும் நிலை உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

சாலைகளில் புழுதி பறப்பதால் காலையில் அந்த வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைகிறார்கள். எனவே புழுதி பறப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் மண் மீது தண்ணீரை தெளிக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்