கம்மம்பள்ளி அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவர்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2022-09-08 17:27 GMT

கிருஷ்ணகிரி அருகே கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றகோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு பள்ளி

கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 430 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இந்த பள்ளிக்கு அருகில் உள்ள கெட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்த நிலையில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்லாமல் பள்ளியை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய இடத்தில் பள்ளியை கட்டித்தர வேண்டும் எனக்கோரி பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து ஒரு மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சென்றாயப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன்ராம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதிய கட்டிடம்

இதுகுறித்து தாசில்தார் சம்பத் கூறுகையில், முதற்கட்டமாக பள்ளியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மண்ணை கொட்டி சீரமைக்கப்படும். பள்ளி கட்டிடத்தில் தண்ணீர் வரும் பாதையை கண்டறிந்து சரி செய்யப்படும். பொதுப்பணித்துறை பொறியாளர் மூலம் பள்ளிக்கட்டிடங்கள் உறுதியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படும். பள்ளி வளாகத்தை சீரமைக்கும் வரை, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடுமுறை எடுத்து கொள்ளலாம். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நல்ல நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, விரைவில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே பெற்றோர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பரபரப்பு

இதில் சமாதானம் அடைந்த மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் மூலம் ஏரி தண்ணீர் செல்லும் வாய்க்காலை சீரமைத்து, பள்ளி வளாகத்தில் மண்ணை கொட்டி பணிகள் நடந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்