அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கோரி சாலைமறியல்

மகுடஞ்சாவடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2023-06-23 20:06 GMT

இளம்பிள்ளை:-

மகுடஞ்சாவடியில் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். பெற்றோர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு பள்ளி

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு ஆங்கில வழி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இதில் 248 மாணவர்களும், 279 மாணவிகளும் என மொத்தம் 527 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாற்று பணியில் இருந்து வந்த 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் அந்த ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிக்கு சென்றதாகவும், இதனால் பள்ளியில் ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

சாலைமறியல்

தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் மகுடஞ்சாவடியில் எடப்பாடி சாலைக்கு சென்று பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) விஸ்வநாதன், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, வட்டார கல்வி அலுவலர்கள் பிரேம்ஆனந்த், முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பச்சமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளதாகவும், 2 ஆசிரியர்கள் விடுப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்