ஆசிரியர் மீது பொய் வழக்கு: உறவினர்கள் சாலை மறியல் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே ஆசிரியர் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). கம்மாபுரத்தில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கார்த்திகேயனின் உறவினரும், பகுதி நேர ஆசிரியருமான மணிக்கண்ணன் (38) மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர், இருதரப்பினரையும் சமாதானம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர், கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் கம்மாபுரம் போலீசார் கார்த்திகேயன், மணிக்கண்ணன் மீது வழக்குப்பதிந்து, நேற்று மணிக்கண்ணனை கைது செய்து, விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த மணிக் கண்ணனின் உறவினர்கள் மணிக்கண்ணன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறியும், போலீசாரை கண்டித்தும் நேற்று இரவு விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விசாரணை முடிந்ததும் மணிக்கண்ணனை விடுவிப்பதாக கூறினார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.