குடிநீர் குழாயில் உடைப்பு
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் ரோட்டின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.;
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் ரோட்டின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாவதுடன் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
குடிநீர் குழாய் உடைப்பு
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த காலங்களில் இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. நீண்ட நாட்களாக இந்த பிரச்சிைன இல்லாத நிலையில் தற்போது மீண்டும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து அதிக அளவில் வெளியேறும் குடிநீர் ரோட்டில் வீணாக பாய்ந்து வருகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு 4 நாட்களுக்கு மேலாகிய பின்னரும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது.
எனவே குடிநீர் வீணடிப்பை தடுக்க குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, இது முக்கியமான கடை வீதியாக இருப்பதாலும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியாக இருப்பதாலும் இந்த வீதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக ரோடு பெருமளவில் சேதமடைந்து நடுரோட்டில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த குழியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லும் போது அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இதேபோல் ரோட்டோரம் உள்ள கடைகளுக்கும் தண்ணீர் செல்கிறது. மேலும் இவ்வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் செல்வதால் ரோட்டில் உள்ள குழி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. எனவே ரோடை பாதுகாக்கவும், குடிநீர் விரயத்தை தடுக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?