உடுமலையில், மின்நிலையம் மற்றும் உயரழுத்த, தாழ்வழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும்.அந்த நேரத்தில் அந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, மின் பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அத்துடன் அந்த நேரத்தில் அந்த பகுதிகளில், மின் கம்பிகள் மீது உரசும் அளவிற்கு உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை மின் பணியாளர்கள் வெட்டுகின்றனர். ஆனால் அந்த மரக்கிளைகளை அதே இடங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர்.
அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புறப்படுத்துவதில்லை. அதனால் வெட்டிப்போடப்பட்டுள்ள மரக்கிளைகளில் உள்ள இலைகள் காய்ந்தும் மரக்கிளையின் குச்சிகள் நீட்டிக்கொண்டும் உள்ளது. இதுபோன்ற நிலை வ.உ.சி.வீதி, சர்தார் வீதி உள்ளிட்ட பல வீதிப்பகுதிகளில் உள்ளது. வெட்டி போடப்பட்ட மரக்கிளைகள் அதே இடங்களில் கிடக்கின்றன.
அதனால் அந்த வீதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வரும் நிலையில் இருசக்கர வாகனத்தை ஓரமாக ஓட்டிச்செல்லும் போது மரக்கிளைகள், இருசக்கர வாகனத்தில் வருகிறவர்கள் மீது உரசுகிறது. போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.
மின் பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியது மின் பணியாளர்களின் பணியா அல்லது நகராட்சி தூய்மைப்பணியாளர்களின் பணியா என்பதில் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். எது எப்படியிருந்தாலும், வெட்டி போடப்படும் மரக்கிளைகளை உடனுக்குடன் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.