விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
சாலை மறியல் விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்;
மன்னார்குடி:
மன்னார்குடி நகராட்சி சார்பில் சேதமடைந்த சாலைகள், குளங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி ருக்மணி குளத்தின் 4 கரைகள் உயர்த்தப்பட்டு, சிமெண்டு கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ருக்மணி குளத்தின் வடகரையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு வந்த இந்து முன்னணியினர் விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், நிர்வாகி குணா, நகர பொதுசெயலாளர் கென்னடி, மாவட்ட செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். கற்பக விநாயகர் கோவிலை அகற்ற கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- தஞ்சை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.