நத்தத்தில் மதுபாரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
நத்தத்தில் மதுபாரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நத்தம் கோவில்பட்டியில், மதுரை சாலையில் தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது. இதனை அகற்றக்கோரி கோவில்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் பாரை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் மதுபான பாரை அகற்றக்கோரி, நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், நத்தம்-மதுரை சாலையில் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, மதுபான பாரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக நத்தம்-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.