போதமலைக்கு தார்சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

Update: 2023-01-28 18:45 GMT

ராசிபுரம்:

போதமலைக்கு தார்சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என மழைவாழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரடு முரடனான வழித்தடம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ளது போதமலை. இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதியான இங்கு பலா, வாழை உள்ளிட்ட கனி வகைகள், நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. போதமலையில் உள்ள கீழூர் ஊராட்சியில் கோவில், பள்ளிக்கூடம் உள்ளன. கீழூர் ஊராட்சியில் கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 120 குடும்பத்தை சேர்ந்த 800 பேர் வசிக்கின்றனர். மேலூரில் 60 குடும்பத்தைச் சேர்ந்த 450 பேரும், கெடமலையில் 500 பேரும் வசிக்கின்றனர்.

போதமலையில் சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு பிரவசம் பார்ப்பதற்காக கரடு முரடான வழித்தடத்தில் டோலி (தொட்டில்) மூலம் ராசிபுரம், வடுகம் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அதேபோல் திடீரென யாருக்கும் உடல்நலம் பாதித்தாலோ, முதியவர்களை அடிவார பகுதிக்கு அழைத்துவர வேண்டும் என்றாலும் டோலி முைறயே பின்பற்றப்படுகிறது. மலைப்பகுதியில் விளையும் விளை பொருட்களை விற்பதற்கு தலைச்சுமையாக கீழ் பகுதிக்கு கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் வாக்குப்பதிவு பெட்டிகளையும், அதன் உபகரணங்களையும் தலைச்சுமையாக வடுகம் மற்றும் புதுப்பட்டி பகுதியில் இருந்து மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் கொண்டு சென்று வருகின்றனர்.

பசுமை தீர்ப்பாயம் அனுமதி

இங்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் மின்சார வசதி செய்யப்பட்டது. அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால் மின் வினியோகம் பாதிக்கப்படும். அங்கு சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்களின் உதவியுடன் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று சரி செய்ய முடியும். சாலை வசதிக்காக போதமலையை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சாலை அமைக்க வனத்துறையினரிடம் எளிதில் அனுமதி பெற முடியவில்லை.

இதற்கிடையே போதமலையில் சாலை அமைக்க சுப்ரீம் கோர்ட்டின் பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. அதன்படி வடுகம் கிராமத்தில் இருந்து கீழூர் வழியாக மேலூருக்கும், புதுப்பட்டியில் இருந்து கெடமலைக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. சர்வே துறை மூலம் நில அளவீடுகள் முடிந்துள்ளன. இந்த இரு உத்தேச சாலையின் 2 பக்கங்களிலும் 20 மீட்டர் இடைவெளியில் எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. சாலைகள் அமைப்பதற்காக கீழூரில் இருந்து மேலூர் வரை 5.96 ஹெக்டேர் மற்றும் புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரை 2.71 ஹெக்டேர் உள்பட 8 ஹெக்டேர் வனப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

சுற்றுலா தலம்

தற்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை மூலம் சாலை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இனி அரசின் நிதியுதவி கிடைத்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 சாலை அமைக்கும் பணிக்கு ரூ.50 கோடி முதல் 70 கோடி வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

போதமலையில் தார்சாலை அமையும்பட்சத்தில் போக்குவரத்து அதிகளவில் நடைபெறும். மலைப்பகுதியில் வசிப்பவர்களும், தரைப் பகுதியில் வசிப்பவர்களும் எளிதில் சென்று வரலாம். மேலும் போதமலையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும். போதமலை சுற்றுலா தலமாக மாறவும் வாய்ப்புள்ளது..

நீண்ட நாள் கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

போதமலையை சேர்ந்த தங்கராஜூ:- போதமலையில் கீழூர், கெடமலை, மேலூர், நடுவளவு, தெற்கு காடு உள்பட பல குக்கிராமங்கள் உள்ளன. போதமலையில் உள்ள மலைக்கிராம மக்கள் கீழே உள்ள கிராமங்களுக்கு வர போதிய சாலை வசதி இல்லை. கரடு, முரடான ஒத்தையடி பாதையில்தான் வரவேண்டும். மருத்துவ சிகிச்சை பெறவும், பிரசவ பெண்களை பிரசவம் பார்க்க தொட்டில் கட்டிதான் கீழே அழைத்து வர வேண்டும். பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு வந்தும் பல்வேறு காரணங்களால் அது நிறைவேற்றப்படவில்லை.

விரைவில் தார்சாலை அமைத்து கொடுத்தால் அங்கு விளையும் விளை பொருட்களை எளிதாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வரக்கூடும். கொல்லிமலை போல் போதமலையும் சிறப்பை பெற்று விளங்க முடியும். போதமலை சுற்றுலா தலமாக அமைய வாய்ப்புள்ளது. எனவே விரைவில் தார்சாலை அமைத்து மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டு.

அரசு சலுகைகள்

போதமலையை சேர்ந்த விவசாயி பெருமாள்:-

போதமலைக்கு செல்வதற்கு தார்சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தார்சாலை அமைத்து கொடுத்தால் இங்குள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியும். அரசு சலுகைகள் முழுமையாக கிடைக்கும். சுகாதார நிலையம், விவசாயிகளுக்கு மின் இணைப்பு போன்றவைகள் எளிதாக கிடைக்க செய்ய முடியும். சாலை வசதி கிடைத்துவிட்டால் மின்சாரம் தடையின்றி கிடைக்கும்.

இங்கு விளையும் பலா, மிளகு, மகாகன்னி, சப்போட்டா போன்றவற்றை எளிதாக விற்பனை செய்ய முடியும். சாலை வசதி முழுமையாக கிடைத்துவிட்டால் இங்கு நிலத்தின் மதிப்பு கூடும். நோய் வாய்ப்பட்ட முதியவர்களை எளிதில் சிகிச்சை பெற அழைத்து செல்ல முடியும். எனவே விரைவாக தார்சாலை அமைத்து கொடுத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்.

ரேஷன் கடை

போதமலையை சேர்ந்த காத்தான்:-

போதமலை பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கினறனர். போதமலைக்கு வடுகம் கிராமத்தில் இருந்து 7 கி.மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும். போதமலையில் மருத்துவமனை, ரேஷன் கடை போன்றவை இல்லை. குடிநீர் திட்டம் எதுவும் இல்லை. வயதான முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் சாலை வசதி இல்லாததால் அங்குள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் சாலை வசதி இல்லை என்பது தான். தற்போது சாலை வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கான நிதியை பெற்று விரைவாக சாலை அமைத்துக் கொடுத்தால் அடிவாரத்தில் இருந்து எளிதாக சென்று வரலாம். அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும். எனவே விரைந்து தார்சாலை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்