தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.5.62 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொங்கூர் மற்றும் கவுண்டச்சிபுதூர் பகுதிகளில் ரூ.5.62 கோடியில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கொங்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.79 கோடியில் ஆச்சியூர் முதல் கொங்கூர் ரோடு வரை (அலங்காடு வழியாக) புதிய சாலை அமைக்கும் பணி, ரூ.1.83 கோடியில் உண்டாராப்பட்டி-அலங்கியம் -கொங்கூர் வரை சாலை அமைக்கும் பணி, கவுண்டச்சிப்புதூர் ஊராட்சியில் ரூ.2 கோடியில் கவுண்டச்சிப்புதூர் முதல் பூளவாடி ரோடு வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.5.62 கோடியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தாராபுரம் அமராவதி ஆற்றில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமன் கிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், ஊராட்சி, ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி செந்தில்குமார், துணைத்தலைவர் ஈ.சசிக்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணண், நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான எஸ்.முருகானந்தம், யூனியன் 12-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்விரமேஷ், கொங்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கே.ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.