ஆர்.கே. பேட்டை அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் சாவு - திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது மரத்தில் கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-08-17 08:28 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே மொகிலி வெங்கடகிரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் ஆச்சார்யா (வயது 50). இவர் தனது மகன் ரவி தேஜா (22), மனைவி மாதவி (45), மகள் யாமினி (23) உறவினர்கள் வாணி (80), பிரியா (23) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு இவர்கள் 6 பேரும் காரில் தங்களது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஜெகதீஷ் ஆச்சார்யா ஓட்டினார். வழியில் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெடியங்காடு தாமரைக்குளம் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த காரை ஓட்டிய ஜெகதீஷ் ஆச்சாரியா, அருகில் அமர்ந்திருந்த ரவி தேஜா படுகாயம் அடைந்தனர். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் ரவி தேஜாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஆந்திர மாநிலம் ஐதராபாதில் தெலுங்கு குறும்படங்களை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் யாஷினி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்