இந்தியாவில் நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது - ரவி சங்கர் பேச்சு
இந்தியாவில் உள்ள நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் தெரிவித்தார்.;
பயிற்சி வகுப்பு
வாழும் கலை அமைப்பின் சார்பில் 'ஆனந்த அனுபவம்' என்ற தலைப்பில் 'மகா சத்சங்கம்' பயிற்சி வகுப்பு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது.இதில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பொதுமக்களுக்கு, திறன் ஊக்குவிப்பு, மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சிகள் குறித்து நேரடி பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆவணங்களாக நதிகள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு நதி மாதிரி. தேவை இல்லாததை நினைத்து வருத்தப்படக்கூடாது. வாழ்க்கை செல்லும் வழியிலேயே நாமும் பயணிக்க வேண்டும்.
பணம், காசு, செல்வாக்கு இருந்தாலும் சிலர் மனதளவில் ஏழையாகவே இருக்கிறார்கள். பெரிய பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே, யாராக இருந்தாலும் ஆன்மிகத்துக்குள் வர முடியும்.
எதையும் நினைத்து பயப்படாதீர்கள். இந்தியாவில் 85 நதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த நதிகள் அனைத்தும் ஆவணங்களாக மட்டுமே இருக்கின்றன. இந்த நதிகளை இணைத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.