குறுகலான சாலையால் விபத்து அபாயம்

பர்லியாரில் சாலை குறுகலாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-11-16 18:45 GMT

ஊட்டி, 

பர்லியாரில் சாலை குறுகலாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான சாலை

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் வருகின்றன. இதில் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மலைப்பாதையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், குறுகலான சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நீலகிரி மாவட்ட எல்லையான பர்லியாறு சோதனைச்சாவடி அருகே சாலை குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் உரசி கொண்டு செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்து அபாயம்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் செங்குத்தான மேடு, வளைவுகள் அதிகமாக உள்ளன. மேலும் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பர்லியாறு சோதனைச்சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று உரசி, விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் வழிவிட முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து பாதிப்பால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவது இல்லை. அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரிவாக்க பணிகள்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாதை கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது ரூ.62 கோடியில் விரிவாக்க பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பர்லியாறு சோதனை சாவடி அருகே உள்ள குறுகலான பகுதி 2 மாவட்ட எல்லையில் உள்ளது. எனவே, கோவை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்