லாரி சக்கரத்தில் சிக்கி அரிசி மண்டி உரிமையாளர் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி அரிசி மண்டி உரிமையாளர் தாய் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.;
அம்பத்தூர், ராமாபுரம், ராமன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). திருமுல்லைவாயலில் தனது தம்பியுடன் சேர்ந்து அரிசி மண்டி வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுரவாயலில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரின் குடும்ப நிகழ்ச்சிக்கு தனது தாய் எழிலரசியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வானகரம்-அம்பத்தூர் சாலையில் சென்ற போது நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் சாலையில் விழுந்த ரமேஷ், எதிரே வந்த தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் தாய் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய தாயார் எழிலரசி கையில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஏழிலரசியை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான முனியாண்டி (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.