வருவாய்த்துறை அலுவலர்கள் செயற்குழு கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என வருவாய்த்துறை அலுவலர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-05-26 19:23 GMT

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைர பெருமாள் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வைத்தார். மாவட்ட பொருளாளர் சந்துரு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், கரூர் மாவட்ட பொறுப்பாளருமான குமரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், கரூர் மாவட்ட வருவாய் அலகில் ஒரு சில துணை ஆட்சியர்களை தவிர அநேக துணை ஆட்சியர்கள் அலுவலக நடைமுறைகளை மீறி செயல்பட்டு ஊழியர்கள் விரோத போக்கினை கடைபிடிக்கும் நடைமுறையை அமல்படுத்தி வருகிறார்கள். வருவாய்த்துறை அலுவலர்களை ஒருமையில் பேசுவதும், சுயமரியாதை இல்லாமல் நடத்துவதும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும் அலுவலக பணிகளில் தொடர்ந்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக சம்பந்தப்பட்ட துணை ஆட்சியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலுவலக நடைமுறை

கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ நிவர்த்தி செய்து தர மனு அளிக்கும் போது அரசு வழங்கிய கால அவகாசத்திற்கு முன்னரே குறிப்பாக 15 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் இருக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் 8 நாட்களுக்குள் மனுக்களின் முடிவின் தன்மையை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்ற நெருக்கடி நிலையை உருவாக்குவதை அலுவலக பணி நெருக்கடி மற்றும் பணிப்பழுவின் காரணமாக குறுகிய கால அவகாசத்திற்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அரசு வழங்கிய கால அவகாசமும், அலுவலக நடைமுறையினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்தவில்லை எனில் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது, வருகிற ஜூன் 6-ந்தேதி அன்று அனைத்து வட்ட கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

வருகிற ஜூன் 14-ந்தேதி அன்று கரூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணிமுதல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட, வட்ட நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்