கண்டக்டரின் மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை 8 வாரத்தில் வழங்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டிக்கெட்டை கிழிக்காமல் பயணிகளுக்கு கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட கண்டக்டரின் ஓய்வூதிய பலன்களை அவருடைய மனைவிக்கு 8 வாரத்தில் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-12-10 18:55 GMT

டிக்கெட்டை கிழிக்காமல் பயணிகளுக்கு கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட கண்டக்டரின் ஓய்வூதிய பலன்களை அவருடைய மனைவிக்கு 8 வாரத்தில் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கிழிக்காத டிக்கெட்

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த லயோனல் சிங், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக 1986-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றினேன். 29.11.2000 அன்று தென்காசி மாவட்டம் சோலைசேரியில் இருந்து சுரண்டைக்கு சென்ற பஸ்சில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்திருந்தேன். கை விரல்களில் காயங்கள் இருந்ததால் 2 பயணிகளுக்கு கொடுத்த டிக்கெட் கிழிக்கப்படாமல் இருந்தது.

இதை அறிந்த டிக்கெட் பரிசோதகர்கள், அரசுப்பணியை தவறாக பயன்படுத்திவிட்டேன் என புகார் தெரிவித்தனர். அதன்பேரில் உரிய விசாரணை நடத்தாமல், என்னை 2002-ம் ஆண்டில் பணி நீக்கம் செய்தனர். இந்த உத்தரவை தொழிலாளர் கோர்ட்டும் உறுதி செய்தது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனைவி இடைக்கால மனு

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தபோது லயோனல் சிங் இறந்துவிட்டார்.

இதையடுத்து, போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால், லயோனல் சிங்குக்கு சேர வேண்டிய பணப்பலன்களை தனக்கு வழங்கும்படி அவரது மனைவி அமுதா இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார்.

அப்போது அரசு போக்குவரத்துக்கழக வக்கீல் சத்யசிங் ஆஜராகி, மனுதாரர் தனது பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து கேட்ட டிக்கெட் பரிசோதகர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் என்றார்.

அதற்கு மனுதாரர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜராகி, மனுதாரர் டிக்கெட் கொடுக்காமல் இருந்திருந்தால்தான் தனது பணியை தவறாக பயன்படுத்தியதாக அர்த்தம். விரல்களில் காயம் இருந்ததால் டிக்கெட்டை சரியாக கிழிக்காமல் கொடுத்தது, பணியை தவறாக பயன்படுத்தியது ஆகாது. இதற்காக அவரை பணிநீக்கம் செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

பணப்பலன்களை வழங்க உத்தரவு

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சம்பவத்தன்று மனுதாரரின் கட்டை விரலில் காயம் இருந்ததை டிக்கெட் பரிசோதகர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே லயோனல்சிங் மீதான குற்றச்சாட்டுகள் தேவையற்றது என கருதுகிறேன். மனுதாரர் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி அமுதா, உரிய பணப்பலன்களை கேட்டு போராடி வருகிறார்.

எனவே லயோனல்சிங் பணி நீக்கம் செய்யப்பட்டது, கட்டாய ஓய்வு அளித்ததாக திருத்தம் செய்யப்படுகிறது. அவரை பணிநீக்கம் செய்த நாளை, ஓய்வு பெற்ற நாளாக அறிவித்து, அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணப்பலன்களை 8 வாரத்தில் அமுதாவுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்