ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வெட்டிக்கொலை-போலீஸ் விசாரணை
மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;
மதுரையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
மதுரை தெற்குவாசல் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 65). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. பின்னர் அந்த கும்பல் இவரை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. அவருடைய மருமகன் இதனை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் வெட்டு விழுந்தது. மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் செந்தில்வேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்றது.இது குறித்து தகவல் அறிந்த தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான செந்தில் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அவரது மருமகன், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து தெற்கு வாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் செந்தில்வேலுவுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளது தெரிய வந்தது. மேலும் அவர்களில் ஒரு மகனும், ஒரு மகளும் சென்னையில் வசித்து வருகின்றனர். அதில் ஒருவர் சென்னையில் உளவுத்துறை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.