தென்காசி நகராட்சி அலுவலகம் முன் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்-அ.தி.மு.க.-பா.ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு

தென்காசி நகராட்சி அலுவலகம் முன் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-06-05 19:00 GMT

தென்காசி நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் சாதிர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளர் பாரிசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக தென்காசி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கவுன்சிலர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கூட்டம் தொடங்கியதும் ஒடிசா ெரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் காதர் மைதீன் உள்ளிட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதாவது மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலையை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தங்களது சொந்த செலவில் அமைக்கப்பட இருப்பதாக தீர்மானம் வைக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் உள்பட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கூட்டத்தில் தென்காசி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி பல்வேறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வாக்குவாதம் செய்தனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாக நகராட்சி தலைவர் சாதிர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்