பட்டா வழங்கிய நிலத்தை அளக்க பயனாளிகள் எதிர்ப்பு

பேரணாம்பட்டு அருகே பட்டா வழங்கிய நிலத்தை அளக்க பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Update: 2023-07-04 18:35 GMT

பேரணாம்பட்டு அருகே உள்ள பொகளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 20 சென்ட் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த விவசாய நிலத்தை கடந்த 1992-ம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டு அதில் 62 பேருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து மாணிக்கம் குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் மாணிக்கத்திற்கு சாதகமாக கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி மாணிக்கத்திடம் விவசாய நிலத்தை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கோர்ட்டு அமீனா மற்றும் ஊழியர்கள், பேரணாம்பட்டு தாலுகா துணை சர்வேயர் கங்காதரன், கிராமநர்வாக அலுவலர் உதயகுமார் மற்றும் மேல்பட்டி போலீசாருடன் பொகளூர் கிராமத்திற்கு சென்று மாணிக்கத்தின் விவசாய நிலத்தை அளக்க முயன்றனர். இதனையறிந்த அங்கு பட்டா பெற்ற பயனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் சென்று நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து, பட்டா வழங்கப்பட்ட எங்களுக்கு இந்த இடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள், வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்