இடஒதுக்கீடு பிரச்சினை: கட்சிகளை கடந்து முதல்-அமைச்சருக்கு வன்னியர்கள் கடிதம் எழுத வேண்டும்
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற கட்சிகளை கடந்து முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் வன்னியர்கள் கடிதம் எழுத வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி இலக்கை எட்டுவதற்காக டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் கடுமையான சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
2020-ம் ஆண்டில் மட்டும் தான் என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்களுக்கு சமூக அநீதி தொடர்கிறது. 1989-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் கூட பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அதிலும் கூட கடைநிலைப் பணிகளில் மட்டுமே இந்த அளவு கிடைக்கிறது.
கவலையளிக்கிறது
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக இருப்பதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதியளித்தது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
2023-2024-ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அதாவது மே 31-ந்தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க முடியும். இது மிகவும் சாத்தியமான ஒன்று தான். வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நிலை குறித்த தரவுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும், தேர்வாணையங்களிலும் தயார் நிலையில் உள்ளன.
கடிதம் எழுத வேண்டும்
அவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்கனவே தொடங்கியிருக்கக் கூடும். அவற்றை ஆணையம் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தால் மே 31-ந் தேதிக்குள் வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் இயற்றுவது சாத்தியமே.
எனவே, வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டிற்கு தேவையான தரவுகளைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அதன்படி வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், தமிழக அரசையும் வேண்டி வன்னியர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும் கடிதம் எழுத வேண்டும்.
வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் கட்சி சார்போ, அரசியல் நிலைப்பாடோ எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக படிநிலையிலும் பல நூற்றாண்டுகளாக மிக, மிக பின்தங்கிக் கிடக்கும் வன்னியர் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பது தான் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும்.
அதை உணர்ந்து அனைத்துக் கட்சிகள், அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த வன்னியர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்ட பிற சமூகத்தினரும் இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும்.
வென்றெடுப்போம்
கடிதத்தின் மாதிரியை அனுப்பியிருக்கிறோம். அதன்படி கடிதங்களைத் தயாரித்து முதல்-அமைச்சருக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவருக்கும் உங்கள் பெயரிலும், உங்கள் குடும்பத்தினர் பெயரிலும் தனித்தனியாக அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். வன்னியர்களுக்கான சமூகநீதி நமது உரிமை, அதை நாம் வென்றெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.