ஏரிக்கரையில் இருந்து மாயமான பிள்ளையார் சிலை மீட்பு

ஏரிக்கரையில் இருந்து மாயமான பிள்ளையார் சிலை மீட்கப்பட்டது.

Update: 2022-07-04 20:46 GMT

விக்கிரமங்கலம்,

பிள்ளையார் சிலை

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் ஆலமரத்தடியின் கீழ் கல்லால் ஆன சுமார் 2½ அடி உயர பிள்ளையார் சிலை இருந்தது. இந்த பிள்ளையாரை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 1-ந் தேதியன்று இரவு அந்த பிள்ளையார் சிலையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த பிள்ளையார் சிலையை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு, உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் அரச மரத்தடியில் ஒரு பிள்ளையார் சிலை இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஸ்ரீபுரந்தான் கிராம நாட்டாண்மைகள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த சிலை ஸ்ரீபுரந்தானில் இருந்து காணாமல் போன பிள்ளையார் சிலை என்பது தெரியவந்தது.

ஒப்படைத்தனர்

இது பற்றி அவர்கள், வெண்மான்கொண்டான் கிராம நாட்டாண்மைகளிடம் கேட்டபோது, அவர்கள் அந்த சிலை இங்கு எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. இது எங்கள் ஊர் பிள்ளையார் சிலை இல்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் அந்த சிலையை வெண்மான்கொண்டான் கிராம நாட்டாமைகள், ஸ்ரீபுரந்தான் கிராம நாட்டாமைகளிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோ மூலம் அந்த சிலை கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரிக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்