கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.;
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி செல்லும் சாலையை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் 12 அடி ஆழம் கொண்ட கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்தது. அதனால் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரகர் செல்வகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி 8 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டெருமை வெளியே வர வழி ஏற்படுத்தி கொடுத்து, காட்டெருமையை மீட்டனர். வெளியே வந்த காட்டெருமை ஆக்ரோஷமாக அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் பயன்படுத்தாத குடிநீர் கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.