தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.;
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 133 பேர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மூலம் மணல் திட்டில் தவித்த அகதிகளை மீட்பதற்காக ஹோவர்கிராப்ட் கப்பலில் புறப்பட்டனர். தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பல் திடீரென பழுதானது.
8 அகதிகள் ஒப்படைப்பு
இதை தொடர்ந்து பழுதான கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சரி செய்து பின்னர் தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டிற்கு சென்றனர். அங்கு தவித்த 4 குழந்தைகள் உள்பட 8 அகதிகளை மீட்டு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர். 8 அகதிகளிடமும் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இலங்கை திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் சிவராஜன்(வயது 35), இவருடைய மனைவி நிஷாந்தி(30,) குழந்தைகள் தீபிகா (9), தீட்ஷிகா(7). மற்றொரு குடும்பத்தை சேர்ந்த திரிகோணமலை பகுதியில் இருந்து வந்த கந்தசாமி சந்திரகுமார்(36), இவரது மனைவி மேரி சித்ரா (36) குழந்தைகள் வேணுஜன் (7), 2 மாத குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் அகதிகளாக வந்தது தெரியவந்தது. அகதிகள் 8 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-இலங்கை அகதிகள் கண்ணீர் பேட்டி
மணல் திட்டில் இருந்து மீட்கப்பட்ட அகதிகள் கூறியதாவது, இலங்கை மன்னார் பேசாளை பகுதியில் இருந்து கடந்த 18-ந் தேதி இரவில் பிளாஸ்டிக் படகில் புறப்பட்டோம். ஒவ்வொரு நபரும் படகோட்டியிடம் ஒரு லட்சம் பணம் கொடுத்தோம். கடந்த 19-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மணல் திட்டு பகுதியில் எங்களை இறக்கிவிட்டு சென்று விட்டனர். நன்றாக விடிந்த பின்பு தான் அது நடுக்கடலின் நடுவே உள்ள மணல் பரப்பு என்பது எங்களுக்கு தெரியும். 19-ந்தேதி அதிகாலையில் இருந்து 3 நாட்கள் மணல் திட்டில் குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து வந்தோம். இலங்கையில் இருந்து கொண்டு வந்த 3 லிட்டர் தண்ணீர் மற்றும் பிஸ்ெகட்களை சாப்பிட்டும், கடல் நீரையும் குடித்தும் உயிரை காப்பாற்றி மணல் திட்டில் தவித்தோம். 3 நாட்களாக அந்த பகுதி வழியாக எந்த ஒரு ரோந்து கப்பலும், மீன்பிடி படகும் வரவில்லை. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு உயிர் வாழ்வதற்காக தான் படகுமூலம் தமிழகம் வந்துள்ளோம். அதிலும் 3 நாட்கள் மணல் திட்டில் குழந்தைகளுடன் நாங்கள் பட்ட கஷ்டம் அதிகமானவை. எங்களை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.