விஷ சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்பு: மாவட்ட கலெக்டர் பேட்டி
56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 52 ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 54 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், விஷ சாராய விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாத் கூறியதாவது,
விஷ சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேரின் உடல்நிலை முன்னேறியுள்ளது. 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்
விஷ சாராய புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விஷ சாராயத்தால் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது.உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் அரசின் ஆணைப்படி விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும். என தெரிவித்தார்.