வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 அடி உலோக அம்மன் சிலை மீட்பு
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 அடி உலோக அம்மன் சிலை மீட்பு;
சுவாமிமலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழமையான 5 அடி உயர உலோக சிவகாமி அம்மன் சிலை மீட்கப்பட்டது.
ரகசிய தகவல்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஒரு வீட்டில் பழமையான உலோக சிலை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின்படி ஐ.ஜி. தினகரன் வழிகாட்டுதலின்படி போலீஸ் சூப்பிரண்டு ரவி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஏட்டு கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சுவாமிமலை யாதவ் தெருவில் உள்ள சரவணன் என்பவரின் வீட்டில் நேற்று சோதனை செய்தனர்.
5 அடி உயர அம்மன் சிலை
அப்போது சுமார் 5 அடி உயரமும், 1½ அடி அகலமும் உடைய பிரம்மாண்டமான சிவகாமி அம்மன் உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
5 அடிக்கு மேல் உயரம் கொண்ட சிலைகளை பொதுவாக வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இல்லை என்பதாலும், அந்த சிலையானது பார்ப்பதற்கு தொன்மையான தோற்றத்துடன் இருப்பதாலும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த சிலைக்கு உரிய ஆவணங்களை சரவணனிடம், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கேட்டனர்.
மீட்பு
அதற்கு சரவணன், தன்னிடம் அந்த சிலைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அந்த சிலையை போலீசார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் கோர்ட்டில் மீட்கப்பட்ட சிலையை ஒப்படைத்தனர்.
கோவிலில் இருந்து திருடப்பட்டதா?
இந்த சிலையானது பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். எனினும் இந்த சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறையின் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்று தெரிவித்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், இந்த அம்மன் சிலையானது தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும், கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும், விசாரணைக்கு பிறகே முழுவிவரமும் தெரிய வரும் என்றும் தெரிவித்தனர்.
சிலையை மீட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினரை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி ஆகியோர் பாராட்டினர்.