நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்
நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
குத்தாலம்:
நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் முருகப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.எல். ஏ.க்கள் நிவேதா எம்.முருகன்,எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
சலீமா பானு (சுயேச்சை) பெருமாள் கோவில், மேலையூர் ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
சிவஞானசுந்தரி (தி.மு.க.):- நக்கம்பாடி மயானசாலை, நாகம்பாடி தார்ச்சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.சிவகுமார் (பா.ம.க.):- கோனேரிராஜபுரம் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை கழிவறை வசதியுடன் கட்ட வேண்டும். கோனேரிராஜபுரம் கோவிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.வினோத் (பா.ஜ.க.):- கோமல், சித்தாம்பூர் மாரியம்மன் கோவில் தெரு, ஆட்டூர், எழுமகளூர் சாலைகளை சீரமைக்க வேண்டும்.செழியன் (அ.தி.மு.க.):- பாலையூர் வடக்குத் தெருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
வேகத்தடை
திவ்யா (தி.மு.க.):- கோமல்-கொழையூர் பாலத்தை சரிசெய்ய வேண்டும். கோமல் கடைவீதியில் கழிவறை கட்ட வேண்டும்.பாஸ்கரன் (அ.தி.மு.க.):- கீழ பெரம்பூரில் காருகுடி வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். எடக்குடி, சேத்தூரில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.ராஜேஸ்வரி (தி.மு.க.):-கடலங்குடியில் தெரு பெயர் பலகைகள் அமைக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க போதிய வேகத்தடை அமைக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
சத்யா (அ.தி.மு.க.):- மங்கநல்லூர் பாய்க்கார தெரு, கந்தமங்கலம் ஆதிதிராவிடர் தெருகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜா (தி.மு.க.):-அரையபுரம், தொழுதாலங்குடி கிராமங்களில் பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்.மகேந்திரன்(தலைவர்):- நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.இதில் மேலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.